பொள்ளாச்சி,உடுமலை வட்டார மக்களுக்கு பெரும்பாலும் தாடகைநாச்சியம்மன் மலை என்றால் அதன் இருப்பிடம் தெரிந்து இருக்கும். பொள்ளாச்சியில் இருந்து உடுமலை செல்லும் வழியில் நிங்கள் எப்போதாவது பயணித்து இருந்தால், மின்காற்றாலைகளுக்கு அப்பால் உங்கள் கண்ணுக்குகண்டிப்பாக இந்த மேற்குதொடர்ச்சி மலை தெரிந்திருக்கும். கோமங்கலம்புதூர் தாண்டி அடுத்த 12 கிலோமீட்டர் உங்கள் கண்ணில் இந்த மலையின் அழகு உங்கள் பயணத்தை களைப்பு இல்லாததாக்கி இருக்கும். இந்த மலைகளின் அழகையும், மேகங்கள் முட்டி செல்லும் அற்புத காட்சியை பார்க்கலாம். ஒவ்வொரு நாளும் இந்த மலையின் அழகு ஒவ்வொரு விதமாக இருக்கும். இளம் காலை வேலையில் சுரியகதிர் பட்டு தங்கமாக இருக்கும், மாலை வேலையில் செங்கதிர் விண்ணில், ஏறவில் நிலவொளியில், மழை காலத்தில் மேகங்கள் சூழ்ந்தும் அழகாக இருக்கும். பள்ளியில் படிக்கும் காலங்களில் ஒருநாள் இந்த மலையின் உச்சியில் எறிவிடவேண்டும் என்ற எண்ணம் உருவானது. என் தந்தை வனத்துறையில் பணியாற்றியதால் சிறிது காலம், நிலகிரிமலையில் ஊட்டி, கூடலூர், முதுமலையில் யானை கேம்ப் அருகிலும், மேற்குதொடர்ச்சி மலையில் அட்டகட்டி, டாப்ஸ்லிப், மற்றும் சத்தியமங்கலம் மலை பகுதிகளில் என்னுடைய முதல் 12 வருடங்கள் கழிந்தன, பின் உடுமலையில் தாத்தா பாட்டி, சொந்தங்கள் அருகில் வாழ தொடங்கினோம். இன்னும் பெற்றோர் அங்குதான் வாழ்கின்றன.நான் சொல்லும் தாடகைநாச்சியம்மன் மலை ஆழியார் அணைகட்டுக்கும் திருமூர்த்தி அணைகட்டுக்கும் இடையில் உள்ள மலை. இதன் உச்சியில் இருந்து பார்த்தல் இரு அணைகளும், அதனை இணைக்கும் கான்டூர் வாய்க்காலும் மிக அழகாக இருக்கும்.
உடுமலையில் இருந்து 5 ம் நம்பர் பஸ் ஏறி, 12 கிலோமீட்டர் தாண்டி ரெட்டியாரூர் பள்ளி பஸ் இறக்கத்தில் இறங்கி 2 கிலோமீட்டர் தெற்கே நடந்தால் அல்லது பொள்ளாச்சியில் இருந்து வரும் 27ம நம்பர் பஸ் மாறி போனால் வருவது அர்த்தநாரிபாளையம். என் கல்லூரி நண்பன் சதீஷின் அழகிய பசுமையான, தென்னதோப்புகள் நிறைந்த கிராமம். கல்லூரி நாட்களில் என்வீட்டில் நான் தங்கிய நாட்களை விட சதீஷின் அம்மா கையால் நெறிய சாப்பிட்டு இருக்கேன். இன்னும் இவர்கள் தோட்டத்து கொள்ளு, இங்கு அமெரிக்காவில் எங்கள் சமையல் அறையில். சதீஷின் சில விவசாய நிலங்கள் இந்த மலைத்தொடரின் அடிவாரத்தில் இருக்கிறது. மேலும் கோபாலசுவாமி மலைக்கோவில் இவன் ஊரில் இருந்து சிறுதூரம் தான்.. ஒருமுறை அர்த்தநாரிபாளையம் அம்மன் கோவில் திருவிழாவின் போது ஒரு கோஷ்டி தாடகைநாச்சியம்மன் மலைக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருவதாக அதிகாலையில் புறப்பட்டது, நாங்களும் நண்பர்களுடன் ஆறு மணிநேரம் மலை ஏறி இதன் உச்சிக்கு சென்று மறுபடியும் ஆறு மணிநேரம் கீழே இறங்கி வந்தோம். சில இடங்களில் தவறி விழுந்தால் எலும்பு கூட கிடைக்காத அளவிற்கு பள்ளம். மைனா படத்தில் வரும் இயற்கை கட்சிகளை மிஞ்சும் அளவிற்கு அழகிய மலை. அடுத்தமுறை நண்பர்கள் மட்டும் வந்து 2-3 நாட்கள் தங்கி செல்வது என திட்டமிட்டோம். அடுத்த செமஸ்டர் விடுமுறையில் மூன்றுநாட்கள் தங்குவது என்று முடிவெடுத்து எல்லோர் வீட்டிலும் சொல்லிவிட்டு கிளம்பினோம்.
எங்கப்பா சொன்னாரு, பாரஸ்ட்காரங்க சந்தனகட்டை கடத்தறவனுகளை பிடிக்க அந்தபக்கம் வருவாங்க, அதேமாதிரி கட்டை கடத்தரவனும் இருப்பான், உங்களை பாரஸ்ட்காரங்க சந்தனகட்டை கடத்தரவுனுகளாவும், கட்டை கடத்தரவனுக உங்களை பாரஸ்ட்காரங்களாவும் நினைச்சி பிரச்சனையிலே மாட்டிக்காமே "மொத்ததுலே ஜாலியவும் இரு அன்ன சாக்கிரதையாவும் இருன்னு" சொன்னாரு.
நண்பர்கள் மாரி, அன்பு, முருகவேல், சதீஷ், குட்டி சதீஷ், நான், மற்றும் உள்ளூர் நண்பர்கள் என 10 பேர் கிளம்பிவிட்டோம். தேவையான பொருட்களை நாடார் கடையில் வாங்கி கொள்ள ஒரு பட்டியல் போட்டோம். ரவை, அரிசி, பருப்பு, மிளகாய், வெங்காயம், சர்க்கரை, டீ, உப்பு, எண்ணை, என தேவையான உணவு பொருட்களையும், தங்குவதற்கும் சமைப்பதற்கு, கூடாரம் அமைக்க பொருட்கள் என தயார் செய்தோம். உரபைகளை ஒன்றாக இணைத்து பெரிய விரிப்பாக கிராமத்தில் செய்து இருப்பார்கள், இதனை கூடாரம் போடா எடுத்துகொண்டோம். ஆளுக்கு ஒரு போர்வை, அரிவாள், டார்ச் லைட், தண்ணீர் பாட்டில். இவை அனைத்தையும் சம அளவில், சம எடை இருக்குமாறுபிரித்து அவரவர் போர்வையை விரித்து அதன் மத்தியில் வைத்து போர்வையை சுற்றி பின் கயிற்றால் இறுக்கி மூட்டை மாதிரி செய்து அதனை முதுகில் கட்டிகொள்வோம். இப்படி செய்வதை வள்ளி கட்டுதல் எனறு சொல்லுவார்கள். இப்போ எல்லாம் backpacking நு இதே சொல்லறாங்க. இப்படி எல்லாவற்றையும் முதுகில் ஏற்றி மாலை ஆறு மணிவாக்கில் அடிவாரத்தை நோக்கி நடையை போட்டோம், எங்க கூடவே 2 கோழிகளும் பயணத்தை தொடங்கின, அவைகளுக்கு தெரியவில்லை இன்னும் ஒருநாளில் எங்களுக்கு உணவாகபோகிறது என்று. ஊரு பெருசுக எல்லாம் பாத்து போங்கப்பானு அறிவுரை. இரவில் மாலை ஏறுவதற்கு காரணம் நிலவொளி, மற்றும் வெய்யில அவ்வளவாக இருக்காது. மேலும் நிறையபேர் அடிகடி சென்று வருவதால் ஒத்தையடி பாதை உருவாகி இருந்தது. நண்பர்களை கிண்டல் அடித்துக்கொண்டும், ஊர் பழமை பேசியபடியும் களைப்பு தெரியாமல் மாலை ஏறுவோம். இப்படி வளைந்து வளைந்து மேலே செல்லும் பாதை ஒரு கட்டத்திற்கு மேலே கிடையாது, ஒரு அனுமானத்தில் மாலை ஏறவேண்டும். நடுவில் ஒரு ஊற்று இருக்கிறது, அங்கு தண்ணீர் நிரப்பிக்கொண்டு சிறிது களைப்பாறி செல்வோம். இந்த இடம் வந்த பிறகுதான் உண்மையான மலையேற்றம் ஆரம்பம்.
இரண்டு அடி அகலத்தில் பக்கவாட்டில் பள்ளத்தாக்கு ஒட்டி ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி இரநூறு அடி நடக்க வேண்டும், பிறகு வலுக்குபாரை என்ற இடம் வரும், இதற்கு மேல் பாறையில் ஊர்ந்து சென்று பிறகு அடர்ந்த காட்டுபகுதியை கடக்கவேண்டும். இந்த அடர்ந்த காட்டில் பகலில் கூட வெய்யில உள்ளே நுழையாது. மூங்கில் காடுகளும், தேக்கு மற்றும் இலவங்க மரமும் நிறைய இருக்கும். இதனை கடந்து இரண்டு மணிநேரம் நடந்தால் கோவில் வரும், கோவில் அருகில் செல்லும் போதே இலவங்க மரத்தின் வாசம் விசும். அப்போதே நாங்கள் உற்சாகமாகி, வழியில் கிடைக்கும் காய்ந்த மரங்களை சேகரிக்க அரம்பிதுவிடுவோம். கோவில் அருகில் ஒரு ஊற்று, வட்டப்பாறை, அதில் ஆட்டுக்கல் செதுக்கி வைத்து இருப்பார்கள், 2-3 கற்களால் கூட்டப்பட்ட அடுப்பு இருக்கும். வட்டபரையில் கூடாரம் அமைத்து தங்குவோம். சென்றவுடன் எல்லோரும் வேலைகளை பிரித்துகொண்டு செயல்பட ஆரம்பிப்போம்.
மரகிளைகளை வெட்டி கூடாரம் அமைக்க கிளைகளை எடுத்து வருதல், இரவு குளிருக்கும், காட்டு விலங்குகள் வராமல் இருக்க நெருப்பு போடா கட்டைகளை சேர்ப்பது, கொண்டுவந்த பொருட்களை பத்திரபடுதுவது, காலை உணவு உப்புமா செய்வது, இளவஞ்கபட்டைகளை உரித்து டீ வைப்பது என எல்லோரும் வேலையில் மும்மரமாக இருப்போம். எல்லாம் அமைந்தபிறகு, காலை உணவு சாப்பிட்டுவிட்டு, மலையின் அழகை காண சிலரும், அசதியைபோக்க குட்டி தூக்கமும், சிலர் ரம்மி ஆடுவதுமாகபொழுது போக்குவோம்.
மதியம் அரிசி, பருப்பு, தேங்காய், சேர்த்து கொங்கு வாட்டரதிற்கே உரிய அரிசிபருப்பு சாதம் ரெடியாகும், அதை மங்கா ஊறுகாயுடன் சாப்பிடுவது அமிர்தம். இரவுக்கு கொண்டு சென்ற கோழிகளை ஒன்றை சாமிக்கு பலியிட்டு, தேங்காய் அரைத்து கொழம்பு வைத்து சாப்பிடுவோம். அந்த மனம், ருசி இன்னும் எவ்வளவோ இடத்தில சாப்பிடும் இன்னும் கிடைக்காமல் தேடிக்கொண்டு இருக்கிறேன். நாடு ராத்திரி எழுந்து மிச்சம் இருந்த கொழம்பு சாதத்துடன் சபித்து இன்னும் நினைவுக்கு இருக்கிறது.நிலவொளியிலும், நெருப்பு வெளிச்சத்தில் ரம்மி ஆடுவதும் வெளி உலக தொடர்பே இல்லாமலும் அருமையாக பொழுது போகும். நண்பர்களிடம் நெருக்கம் இன்னும் இறுகும்.
கொண்டு சென்ற கோழி, அரிசி எல்லாம் தீர்ந்தபின் கீழே இறங்கி வருவோம். கிராமத்துக்கு வந்து பாப்புசெட்ல் ஒருமணி நேரம் குளிச்சதுகு அப்புறோம் தான் என்கமேல இருக்கற மலைவாசம் போகும். இதுமாதிரி சிறிய, பெரிய கூட்டத்துடன் 7-8 முறை சென்று இருக்கிறோம். இதுதவிர, பரம்பிக்குளம், சோலையாறு, பச்சைமலை, டாப்ஸ்லிப், வெள்ளிங்கிரிமலை, மருதமலை மேலே, என நான் ஏறத மலைகளில் இல்லை. அப்போ அப்போ யானை பார்த்து ஓடிவந்த சம்பவமும், பச்சைமலையில் புலியை பார்த்து நண்பன் பத்துநாள் காச்சலில் படுத்த கதைகளை அடுத்து அடுத்து மொக்கை போடறேன்.
அடுத்த முறை இந்திய செல்லும்போது இப்படி மாலை ஏறவேண்டும் என்று நினைப்பேன், ஆனால்என்னுடைய liabilities(அதாங்க வீட்டம்மா, புள்ளைங்க குட்டிக) அனுமதிப்பது இல்லை. பார்போம் அடுத்து என்பயனுடன் இங்கு கேம்பிங் சென்று ஆசையை பூர்ததிசெயயவேண்டியதுதான்...
படம் google map இல் இருந்து. நன்றி google.